கோயம்பேடு சந்தையில் தக்காளி, முருங்கைக்காய் விலை உயர்வு

By ச.கார்த்திகேயன்

சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.32 ஆகவும், முருங்கைக்காய் ரூ.50 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் கடந்த இரு மாதங்களாக காய்கறிகளின் விலை குறைந்து வந்தது. பல காய்கறிகள் கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி காய்கறி விலை உயரத் தொடங்கியது. தற்போது பல வீடுகளில் புரட்டாசி மாதம் அசைவம் தவிர்த்து சைவத்துக்கு மாறி இருப்பதால், காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் காய்கறிகளின் விலை மேலும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ. 22-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.32 ஆக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் இன்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.50, முருங்கைக்காய் ரூ.70-க்கு விற்கப்பட்டு வருகிறது.

மற்ற காய்கறிகளான பெரிய வெங்காயம், கேரட் தலா ரூ.40, உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, பீன்ஸ் ரூ.25, கத்தரிக்காய், பச்சை மிளகாய், நூக்கல் தலா ரூ.20, பாகற்காய் ரூ.15, அவரைக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.10, முட்டைகோஸ் ரூ.8 என விற்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, தற்போது தக்காளி, முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. அதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அவரைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE