சென்னை: மீட்டர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் நாளை மறுநாள் (செப்.24) கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக ஆட்டோ-டாக்சி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: ''ஆட்டோ தொழிலை பாதுகாக்க நாங்கள் தினம் தினம் போராடி வருகிறோம். சவாரி குறைந்து வருவாய் இழந்து வாடி நிற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளோ போக்குவரத்து கார்ப்பரேட் நிறுவனங்களைத் தடை செய்யாமல் அவற்றுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளதால், அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகள் முடிந்துள்ளது. இந்த உத்தரவை மதிக்காத மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் அபராத முறையை அமல்படுத்தி ஆட்டோ தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறது. இதைக் கண்டித்து கடந்த ஆண்டு உண்ணாவிரதம், கோட்டை நோக்கி பேரணி போன்ற போராட்டங்களில் ஈடுபட்டோம்.
ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. எனவே, மீண்டும் அரசை வலியுறுத்தும் வகையில் நாளை மறுநாள் (செப்.24) எழும்பூர், பழைய சித்ரா திரையரங்கில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டை நோக்கி பேரணியை நடத்த உள்ளோம். இதன் மூலம் பைக் டாக்சிக்கு தடை, ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோவுக்கு விலக்கு, மீட்டர் கட்டண உயர்வு, அரசு சார்பில் ஆட்டோ செயலியை விரைந்து தொடங்குதல், ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் என்ற தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் என நம்புகிறோம்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
» என்.ஆர்.காங். - பாஜக ஆட்சியில் புதுச்சேரி பொருளாதாரம் வீழ்ச்சி: ஜி.ராமகிருஷ்ணன் விமர்சனம்
» ஸ்ரீரங்கம், லால்குடி அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு