திருச்சி: ஸ்ரீரங்கம், லால்குடி அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி வந்தார். இன்று காலை காவேரி மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்த அவர், கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொழிலதிபர் மறைந்த கே என் ராமஜெயம் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
அதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள், ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.
முதியவருக்கு உதவி: ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த முதியவர் நடக்க முடியாததால் தவழ்ந்தபடி வந்தார், அவரைப் பார்த்த அமைச்சர் அவரை வீல் சேரில் அமர வைத்து அழைத்துச் செல்லும்படி மருத்துவமனை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து முதியவரிடம் பேசிய அமைச்சர் நீங்கள் எந்த ஊர் என கேட்க, வளர்ந்தியில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். திரும்பி எப்படி செல்வீர்கள் என கேட்டு அந்த முதியவருக்கு பண உதவி செய்தார்.