நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு?

By த.அசோக் குமார்

தென்காசி/ திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மக்கள் பலரும் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், கல்யாணிபுரம், ஆம்பூர், கடையம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வை உணரப்பட்டது.

நில அதிர்வு உணரப்பட்ட இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் ஆகும். பல்வேறு கிராமங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் காலை 11.55 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது. தற்போது வரை அரசின் Seismo இணையதளத்தில் பதிவுகள் ஏதும் வரப்பெறவில்லை. இதுவரை யாருக்கும் காயமோ பிற சேதங்களோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. களஅலுவலர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE