திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: குழந்தைகளுடன் உற்சாக குளியல்

By எல்.மோகன்

நாகர்கோவில்: ஞாயிற்றுகிழமையான இன்று திற்பரப்பு அருவி களைகட்டியது. சுற்றுலா பயணிகள் ஏாரளமானோர் குழந்தைகளுடன் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள், பண்டிகை கால விடுமுறை, கோடைகால விடுமுறை நாட்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவார்கள். இதனால் கன்னியாகுமரி மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலா மையங்களில் கூட்டம் அலைமோதும்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கூடினர். கேரள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் அதிக அளவில் வந்திருந்தனர். சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்த பின்னர். படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு உற்சாக பயணம் செய்து திரும்பினர்.

பின்னர் கன்னியாகுமரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு சென்று வந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரியில் அரசு மற்றும் தனியார் விடுதிகள் நிரம்பி வழிந்தன. அறை கிடைக்காதவர்கள் நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கினர்.

பத்மநாபபுரம் அரண்மனை, உதயகிரி கோட்டை, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம் மற்றும் சுற்றுலா மையங்கள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் களைகட்டி காணப்பட்டது. திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டும் நிலையில் அங்கு கடந்த இரு நாட்களாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடினார்.

குறிப்பாக இன்று காலையில் இருந்தே குலசேகரத்தில் இருந்து திற்பரப்பு அருவி வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் சென்றன. பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் திரண்டனர். குழந்தைகளுடன் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அருவியில் கூட்டமாக சென்றவர்கள் குளித்து முடிந்த பின்னரே மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் இன்று குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE