கோயில் கருவறைகளில் அனைத்து சாதி அர்ச்சகர்களும் உரிய மரியாதையுடன் பூஜை செய்கிறார்களா? - ராமதாஸ்

By KU BUREAU

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின்படி, ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியும், அவமரியாதையும் சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் தொடர்கின்றன.

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் ஏட்டளவில் புரட்சிகரமான திட்டம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதை அரசு எந்த அளவுக்கு செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்துதான் பெரியாரின் கனவுக்கு அது நியாயம்சேர்க்கிறதா அல்லது துரோகம் செய்கிறதா என்பது உறுதியாகும். அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தை வெற்றிகரமாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?

அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, என்பது குறித்து ஒருமுறையாவது ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் நடத்தியிருப்பாரா, அனைத்து சாதிஅர்ச்சகர்கள் திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவமதிப்புகள் குறித்த புகார் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன?

அனைத்து சாதி அர்ச்சகர்கள் பூசை செய்த கடவுள் சிலைகளுக்கு நாங்கள் பூஜை செய்ய மாட்டோம் என்று பரம்பரை அர்ச்சகர்கள் போர்க்கொடி உயர்த்தினால் அவர்களை இடமாற்றம் செய்துவிட்டு, அந்த இடத்தில் பூஜை செய்யும் உரிமையை அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கே வழங்க முடியாதா, அதை செய்ய தமிழக அரசு தயங்குவது ஏன்?

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளில் கடந்த 3 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் எத்தனை பேர், அவர்களில் எத்தனை பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு உரிய உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டால் தான் உண்மையான சமத்துவம் மலரும். எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, அவர்களுக்குரிய உரிமை, மரியாதை ஆகியவற்றுடன் கோயில்களின் கருவறைகளில் பூஜை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE