டாஸ்மாக் திறந்திருக்கு; ஆனா பால் கிடைக்கல - கொந்தளிக்கும் சென்னை மக்கள்

By காமதேனு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி முழுவதும் கன மழை கொட்டி தீர்த்தது. 48 மணி நேரத்தில் சுமார் 48 செ.மீ அளவிற்கு மழை பெய்ததால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளநீர் இன்னும் பல இடங்களில் வடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், அசோக் நகர், மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாததால் மின்சார சேவை வழங்கப்படவில்லை.

வடியாத மழைநீர்

இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மின்சார சேவை மட்டுமின்றி இணைய சேவையும் கிடைக்கவில்லை என்பதால் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்ற முடியாததால் தகவல் பரிமாற்றத்திலும் பெரும் சிரமம் நிலவி வருகிறது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னையில் வடியாத மழைநீர்

பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பால், தண்ணீர், பிரட் போன்ற உணவுப் பொருட்களை பெற மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் இருக்கும் வீடுகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மழை நின்று இரண்டு நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாததோடு மின்சாரமும் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் வட சென்னை பகுதியைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழைநீர்

சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கூறும் போது, சேப்பாக்கத்தில் 42 கோடி ரூபாய்க்கு கார் ரேஸ் போட்டிகளுக்கு சாலைகள் போடப்படுவதாகவும், ஆனால் கோடம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் செல்வதற்கான சரியான வடிநீர் வாய்க்கால்கள் இல்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் உள்ள டாஸ்மாக் இயங்கி வருவதாகவும், ஆனால் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்காமல் மெழுகுவர்த்தியை 110 ரூபாய் வரை வாங்க வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் என யாரை தொடர்பு கொண்டாலும் அவர்கள் போனை எடுப்பதில்லை எனவும் அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து தங்களை பார்க்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!

எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE