உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தலித் அமைப்புகளும் ஏற்றுக் கொள்வது தான் சமூக நீதி: ஓய்வு பெற்ற நீதிபதி

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் 3சதவீதம் உள் ஒதுக்கீடு தரலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தலித் அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதுதான் சமூக நீதியாகும் என ஓய்வு பெற்ற நீதிபதி து.அரிபரிந்தாமன் சனிக்கிழமை மதுரையில் தெரிவித்தார்.

மதுரை கே.கே.நகரில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சமூக நீதி கருத்தரங்கம் இன்று இன்று நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி து.அரிபரந்தாமன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகள் அமர்வு பட்டியல் இனத்துக்குள்ளாக 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என ஒரு முக்கியமான தீர்ப்பை அளித்தது. அந்த தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டில் பட்டியலினத்துக்கு 18 சதவீத ஒதுக்கீடு உள்ளது. அதில் 2009-ல் தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது 3 சதவீதம் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தார். அதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவில் வழக்கு போட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த ஏழு நீதிபதிகளில் ஆறு நீதிபதிகள் உள் ஒதுக்கீடு தரலாம் என கூறியிருக்கிறார்கள். அதனை வரவேற்கிறோம். அதே தீர்ப்பை இங்குள்ள ஆதிக்கம் செலுத்தக்கூடிய தலித் அமைப்புகள் இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள்.

ஆனால், எல்லா தலித்துகளும் ஒரு விஷயத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற பரிந்துரைத்த கிரிமிலேயரை எதிர்க்கிறார்கள். அந்த தீர்ப்பில் கிரிமிலேயர் கிடையாது. பரிந்துரைதான் அது. 3 சதவீதத்தை பொறுத்தவரை சரிதான் என்று சொல்லிவிட்டார்கள்.

சந்திரசூட் தீர்ப்பில் ஏன் 3 சதவீத இடஒதுக்கீடு இவர்களுக்கு தரவேண்டும் என்று சொல்லும்போது, அருந்ததியர் பையன் ஒருவன், தலித் பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக அருந்ததியர் வீட்டு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர் என அந்தத் தீர்ப்பில் பதிவு செய்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் மதுரை அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்பவரது தலை வெட்டப்பட்டது. நீதிபதி கவாய் தீர்ப்பில் சொல்லும்போது, பெரியார் சொன்னதை மேற்கோள் காட்டி ஒன்றைச் சொல்கிறார். ரயில் பெட்டிக்குள் ஒருவன் போக வேண்டும் என்று நினைக்கிறான். ரயில் பெட்டிக்குள் போனபின்பு யாரும் வரக்கூடாது என நினைக்கிறான். அது மாதிரி இருக்கிறது என்றார்.

உள் ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை நாங்கள் வரவேற்கிறோம். இதைப் பொறுத்தவரையில் மற்ற தலித் அமைப்புகள், ஆதிக்க நிலையிலிருப்பவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்வதுதான் சமூகநீதிக்கு நல்லது. அப்போதுதான் குறைந்தபட்ச தலித் ஒற்றுமை ஏற்படும். அம்பேத்கர் அனைத்து தலித் மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக தலித் பெடரேஷன் வைத்தார். அதை நிறைவேற்றுவதற்கான ஒரு கோட்பாடாக அது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE