கமல்ஹாசன் ஆதங்கம் முதல் உச்சம் தொடும் தங்கம் விலை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 

By KU BUREAU

மநீம தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவு. மத்திய அரசின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பது உட்பட 16 தீர்மானங்கள் மநீம பொதுக்கூழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மநிம பொதுக்குழுவில் பேசிய கமல்ஹாசன், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதெல்லாம் ஆபத்தானது. இந்தியாவுக்கு அது தேவையில்லை, தேவைப்படாது. நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நாம் கொடுக்கும் பணம். சகோதர மாநிலங்களை பட்டினி போடச் சொல்லவில்லை. பகிர்ந்து உண்போம் என்கிறேன். சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பிய நம்மால் அவர்களுக்கு ஒரு தூதுவிட முடியவில்லையே. அந்தக் குரலாகத்தான் நாம் இருக்க வேண்டும். நான் இருப்பேன். ராஜகோபால் என்னும் தெலுங்கு பேசுபவர் இங்கு முதல்வராக இருந்தார். ஆனால், ஒரு தமிழன் பிரதமர் ஆக முடியுமா? அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும். கோவையில் நடந்தது தோல்வி என்றால் அவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தது வெற்றியல்ல” என்று கமல் பேசினார்.

திண்டுக்கல் நிறுவனத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை: திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்காக நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனத்தில் 7 மணி நேரத்துக்கு மேலாக மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக பாலில் இருந்து எவ்வாறு நெய் பிரித்து எடுக்கப்படுகிறது. அதனுடன் வேறு பொருட்கள் எதுவும் கலக்கப்படுகிறதா என்று நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட நெய் மற்றும் பால் பொருட்களின் மாதிரிகளையும் சேகரித்தனர். பால் உள்ளிட்ட பொருட்களின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக எடுத்தனர்.

“அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு தொடரும் அவமதிப்புகள்...” - “அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை திமுக அரசு மூடி மறைக்கிறது. இதுவா திராவிட மாடல் சமூக நீதி? அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவமதிப்புகள் குறித்து அளித்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக சனிக்கிழமை அதிகாலை பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து உலக நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

டெல்லி முதல்வராக ஆதிஷி பதவியேற்பு: டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி சனிக்கிழமை மாலை ராஜ் நிவாஸில் நடந்த விழாவில் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சுதந்திர இந்தியாவின் 17-வது பெண் முதல்வராகவும், டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வாராகவும் ஆகியிருக்கிறார் அதிஷி. என்றாலும் டெல்லி சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், அவர் குறுகிய காலம் மட்டுமே முதல்வர் பதவியில் இருப்பார்.

ஊடகங்கள் மீது கேரள முதல்வர் சாடல்: வயநாடு நிலச்சரிவு பேரிடருக்காக மத்திய அரசின் உதவி கோரி கேரள அரசு தயாரித்த குறிப்பாணை குறித்து ஊடகங்களின் சில பிரிவினர் பொய்யான செய்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ள மாநில முதல்வர் பினராயி விஜயன், இதனை‘அழிவுகரமான இதழியல்’ என்றும் சாடியுள்ளார்.

42 நாட்களுக்கு பின்பு பணிக்குத் திரும்பிய மருத்துவர்கள்: மேற்கு வங்கத்தில் 42 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளநிலை மருத்துவர்கள் சனிக்கிழமை பணிக்குத் திரும்பினர். அங்குள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், இளநிலை மருத்துவர்கள் சனிக்கிழமை அரசு நடத்தும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் பணிக்குத் திரும்பினர்.

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி பலி: லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியத் தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அவரது இழப்பு ஹிஸ்புல்லாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் அமைதியாக நடந்த அதிபர் தேர்தல்: இலங்கையில் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை அமைதியாக நடைபெற்றது. இதையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், முழுமையான முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சம் தொடும் தங்கம் விலை: ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,960-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.55,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ஏற்றம் கண்டுள்ளது. கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனையானது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது, சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன், உள்நாட்டிலும் வரும் நாட்கள் நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவிருப்பதாலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இத்தகையச் சூழலில் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பியூஸ் மானுஸ் மீது பாஜக புகார்: திருப்பதி லட்டு விவகாரத்தில் இந்துக்கள் மனது புண்படும்படி பேசியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக புகார் அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE