அதிமுக கூட்டணியில் மத்திய சென்னை தொகுதியில் பிரேமலதா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்க உள்ளது முதல் கட்டத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் மூன்று கூட்டணிகள் அமையப்பெற்று தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்துள்ளன. இது தவிர நான்காவது அணியாக சீமானின் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் அதற்கு அடுத்து தற்போதைய நிலையில் பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. அந்தக் கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகளை அதிமுக வழங்கியுள்ளது. மத்திய சென்னை திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அங்கு பிரேமலதாவை போட்டியிடுமாறு அதிமுக வலியுறுத்துவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயகாந்த் மரணத்தால் ஏற்பட்டுள்ள அனுதாபத்தை முழுவதுமாக பெற்றிட பிரேமலதாவை களம் இறக்குவது தான் சிறந்ததாக இருக்கும் என்று அதிமுக கருதுகிறது. அதனால் மத்திய சென்னை தொகுதியில் பிரேமலதாவை நிற்குமாறு அதிமுக அறிவுறுத்தியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அதனால் அங்கு போட்டியிடலாமா என்பது குறித்து பிரேமலதா சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது. பிரேமலதா போட்டியிடப் போகிறார் என்பதாக வெளிவரும் தகவல்களால் மத்திய சென்னை தொகுதி பரபரத்து கிடைக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி தகவல்... அமலாக்கத் துறையின் அடுத்த குறி கார்த்தி சிதம்பரம்?
சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!
மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!
முன்னாள் முதல்வருக்கு இரவோடு இரவாக இருதய அறுவை சிகிச்சை... நலமுடன் இருப்பதாக மகன் தகவல்!
ரசிகர்களின் ஆவேச எதிரொலி: டிக்கெட் விலையை குறைத்தது ஐபிஎல் நிர்வாகம்!