ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By காமதேனு

மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கே தவித்து வருகின்றனர். இந்தநிலையில், புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் தாக்கிய மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெரு மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது.

இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உள் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளனன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் விளக்கமாக குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் ரூ.5060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் மிக்ஜாம் புயலால் செய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு கூடுதல் நிதி கோரப்படும் என்றும் தெரிவித்துள்ள முதல்வர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE