மதுரை - சிவகங்கை சாலை நான்கு வழிச்சாலையாகிறது: நிலங்களை ஒப்படைக்க 60 பேருக்கு நோட்டீஸ்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை - சிவகங்கை சாலையில் ஆட்சியர் அலுவலகம் ஜங்ஷன் முதல் கோமதிபுரம் 5-வது தெரு சாலை வரை 2 கிமீ தொலைவிற்கு சாலை நான்கு வழிச்சாலையாக மாறுகிறது. இந்த சாலைக்கு தேவையான நிலங்களை ஒப்படைக்க 60 பேருக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

மதுரை மாநகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக மதுரை - சிவகங்கை சாலை மாறி வருகிறது. இந்த சாலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அண்ணா பஸ்நிலையம், ஆட்சியர் அலுவலகம், பிற அரசு அலுவலகங்கள், ஆவின் அலுவலகம், மதுரை-அண்ணா நகர் சாலை, லேக்வியூ-அண்ணா நகர் சாலை போன்றவை அமைந்துள்ளது.

மேலும், மதுரை-சிவகங்கை சாலை, மதுரை ரிங் ரோட்டின் இணைப்பு சாலையாகவும் உள்ளது. மதுரை-சிவகங்கை சாலையில், கருப்பாயூரணி, வீரபாஞ்சான் போன்ற இடங்களில் ஏராளமான தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பெருகிவிட்டன. அதனால், காலை, மாலை நேரத்தில் பள்ளி வாகனங்கள், மற்ற நேரங்களில் சரக்கு வாகனங்கள், ரிங் ரோடு மற்றும் சிவகங்கை செல்லும் பயணிகள் வாகனங்கள் போன்றவற்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, மதுரை ஆட்சியர் அலுவலகம் முதல் கோமதிபுரம் 5-வது சாலை வரை மதுரை-சிவகங்கை சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த சாலையில் ஏற்கெனவே, ஆவின் ஐஸ் ஃபேக்டரி முதல் கோமதிபுரம் 5-வது, 4-வது சாலைக்கு நடுவில் வரை 1,100 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடக்கிறது.

மேம்பாலம் அமைக்கும் இடத்தில் நிலத்தை கையகப்படுத்தாமலே, வண்டியூர் கண்மாய் கரையில் மேம்பாலம் நீட்டிக்கப்படுகிறது. ஆனால், ஆட்சியர் அலுவலகம் முதல் மேலமடை சிக்னல் வரை, சாலையை அகலப்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை கண்டிப்பாக தனியார் நிலங்களை கையகப்படுத்தவேண்டிய உள்ளது. அதனால், கடந்த செவ்வாய்கிழமை அன்று, மாநில நெடுஞ்சாலைத்துறை, இந்த சாலையில் உள்ள 60 நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மொத்தம் மதுரை-சிவகங்கை சாலை 2 கி.மீ., நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக போடப்படுகிறது. மதுரை ஆட்சியர் அலுவலகம் முதல், மேலமடை சிக்னல் வரை, சாலையை அகலப்படுத்த நிலத்தை ஒப்படைக்க 60 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இடைப்பட்ட பகுதியில் இந்த சாலை ஒவ்வொரு இடத்திலும் 10 மீட்டர், 11 மீட்டர், 7 மீட்டர் என்ற அளவில் சீராக இல்லாமல் உள்ளது.

இந்த சாலையை ஒரே சீராக 19 மீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்த உள்ளோம். 15 மீட்டர் அகலத்திற்கு சாலை மட்டும் அமைக்கப்படுகிறது. நடுவில் சென்டர் மீடியன் போடப்படுகிறது. சாலையின் இரு புறமும் மழைநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. அதனால், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விரைவாக வாகன ஓட்டிகள், ரிங் ரோடு சென்றுவிடலாம். இந்த சாலையில் அமையும் மேம்பாலம் 4 லைன் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. பாலத்தின் கீழே இருபுறமும் 7.5 மீட்டர் அகலத்தில் சர்வீஸ் சாலை அமைக்கப்படுகிறது.

தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்கள், அடுத்த மாதம் அவர்களது கருத்துகளை தெரிவிக்க கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அதன்பிறகு பேசி, அவர்களுக்கான தொகையை நிர்ணயம் செய்து நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்பணி 3 மாதத்தில் நிறைவடையும். அதன்பிறகு ஆட்சியர் அலுவலகம் முதல் மேலமடை சிக்னல் வரை இச்சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கப்படும். மேம்பாலம், சாலையை அகலப்படுத்தும் பணி, நிலம் ஒப்படைப்புக்கான தொகை உள்ளிட்ட இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE