சிறைக்குச் சென்றாலும் கேஜ்ரிவால் தான் முதல்வர்... ஆம் ஆத்மி கட்சி திட்டவட்டம்!

By காமதேனு

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இலாகா இல்லாத முதல்வராக தொடர்ந்து பதவியில் இருப்பார் என்றும், சிறையில் இருந்தவாறே அவர் ஆட்சியை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரான அர்விந்த் கேஜ்ரிவால் , மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை ஏற்று அவர்கள் முன் ஆஜராகவில்லை. கடந்த திங்கள்கிழமை டெல்லி ஜல் போர்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அதிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதே மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கேசிஆர் மகள் கே.கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு கேஜ்ரிவால் வீட்டிற்குச் சென்று அவரை கைது செய்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக ஆம் ஆத்மி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லியில் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் காரணமாகவே கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக சாடி வருகிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்து வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சியினர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்தான் முதல்வர் என்றும், இலாகா இல்லாத முதல்வராக அவர் தொடர்வார் என்றும் தெரிவித்துள்ள டெல்லி ஆம் ஆத்மி கட்சி, சிறைக்குப் போனாலும் அங்கிருந்தபடியே அவர் தனது முதல்வர் பணியைத் தொடர்வார் என்று அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE