தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கடுமையாக சாடியுள்ளார்.
அதிமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வர அக்கட்சி பெரிதும் முயன்று வந்தது. திண்டிவனம் பகுதியைச் சேர்ந்தவரான அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாசை இரண்டு முறைக்கு மேல் நேரில் சந்தித்து கூட்டணிக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
அதற்கு முதலில் பாமக தரப்பிலிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டது. அதனால் மிகுந்த நம்பிக்கையாக அதிமுக இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென ஒரே இரவில் பாமக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டது. அங்கு அந்த கட்சிக்கு பத்து மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாமக தங்களுடன் கூட்டணிக்கு வராததால் அதிமுக ஏமாற்றத்தில் உள்ளது. இந்த நிலையில் கூட்டணிக்கு பெரிதும் முயன்றவரான சி.வி.சண்முகம் பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "10 ஆண்டுகாலமாக கூட்டணிக் கட்சிகளையும், எதிர்க் கட்சிகளையும் உடைத்த பாஜக, அதிமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. தேசியமும், தமிழும் என கூறி கூட்டணி அமைத்துள்ளவர்களுக்கு தங்களின் குடும்பமும், பணமுமே பிரதானம். தங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்" என்று பாமகவை அவர் மறைமுகமாக சாடினார்.
இதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் பாமகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நாகை அதிமுக மாவட்ட அலுவலகத்தில் கட்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் "தற்போது பாஜக, பாமக அமைத்துள்ள கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி. இட ஒதுக்கீடு என்றால் அறவே வேண்டாம் என்கிற கட்சியான பாஜகவுடன் இடஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் ராமதாஸ் கூட்டணி அமைத்துள்ளார்.
ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அதே போல் வழக்குகளை காட்டி பாஜகவால் அதிமுகவை அடிபணியவைக்க முடியாது" என்று ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் பரபரப்பு... ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டு!
பூட்டு நகரை கோட்டை விட்ட அதிமுக... கொந்தளிக்கும் ரத்தத்தின் ரத்தங்கள்!
32 தமிழக மீனவர்களை விடாமல் விரட்டி கைது செய்த இலங்கை கடற்படை... படகுகளும் பறிமுதல்!
குரூப் 2 நேர்முகத்தேர்வுக்கு தயாராக இருங்க... அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!