தமிழகத்தில் கோடைபோல கொளுத்தும் வெயில்: தினசரி மின்தேவை 30% அதிகரிப்பு

By KU BUREAU

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரிப்பதால், தினசரிமின்தேவை 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. சராசரியாக தமிழகத்தின் தினசரி மின்தேவை 14,000 மெகாவாட். குளிர்காலத்தில் மின்சார பயன்பாடு குறைவதால் தினசரி தேவை 12,000 மெகாவாட்டாக குறையும். கோடைகாலத்தில் பயன்பாடு அதிகரிப்பதால் 16,000 மெகாவாட்டாக அதிகரிக்கும். கடந்த மே 2-ம் தேதி 20,830 மெகாவாட் என உச்சபட்ச அளவை எட்டியது.

இந்நிலையில், கடந்த 15 நாட்களாக தினசரி மின்தேவை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, கோடைகாலத்தில்தான் தினசரி மின்தேவை அதிகரிக்கும். மற்ற நேரங்களில் குறைவாக இருக்கும். வழக்கமாக ஜூன் முதல் செப்டம்பர் வரை தினசரி மின்தேவை 13,000 மெகாவாட் முதல் 16,000 மெகாவாட் என்ற அளவில் இருக்கும்.

17,974 மெகாவாட் அதிகரிப்பு: ஆனால், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த 1-ம் தேதி13,709 மெகாவாட்டாக இருந்த தினசரி மின்தேவை தற்போது 17,974 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது எதிர்பாராததுதான். ஆனாலும், அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

குறிப்பாக, காற்றாலை மூலம் 80 மில்லியன் யூனிட், மத்திய அரசிடம் இருந்து 100 மில்லியன் யூனிட் மின்சாரம் தினசரி கொள்முதல்செய்யப்படுகிறது.

மேலும், சூரியசக்தி மூலம் தினசரி 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்தேவைமேலும் அதிகரித்தால் அதை பூர்த்தி செய்ய, அனல்மின் நிலையங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும். மின்தடை ஏற்படாத அளவுக்கு மின்விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE