மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம்: சிபிஎம் எச்சரிக்கை

By KU BUREAU

ராமேசுவரம்: தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவில்லை என்றால்மீனவர்களை ஒன்று திரட்டி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் எதிரே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, மாவட்டச் செயற்குழு கருணாகரன், தாலுகா செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர்.

இதில், மீனவ சங்கப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகளான மதிமுக கராத்தே பழனிச்சாமி, காங்கிரஸ் ராஜீவ்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செந்தில்வேல் மற்றும்நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசு தமிழக மீனவர்களை தண்டனைக் கைதிகளாக மாற்றி, பெரும் தொகையை அபராதமாக விதித்து வருகிறது.

மீனவர்களுக்கு மொட்டை... அண்மையில் தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து, தன்மானத்தை பறிக்கும் செயலிலும் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசின் இத்தகைய அத்துமீறிய செயல்களை கண்டிக்காத பிரதமர் மோடி, உலகத்துக்கே சமாதானத்தை கொண்டு வருவதாகப் பேசி வருகிறார்.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கி வருகிறது. தமிழகமுதல்வர், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து மத்திய அரசுக்குகடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை.

எனவே, தமிழக மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்த விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வுகாண மத்திய அரசுமுன்வர வேண்டும். தவறும்பட்சத்தில், கடலோர மாவட்ட மீனவர்களை ஒன்றுதிரட்டி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE