தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தகவல்

By KU BUREAU

நாகர்கோவில்: தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை, நிபா வைரஸ் பாதிப்பில்லை என்று சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், கேரள மாநில எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் நிபா வைரஸ்பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் குரங்கம்மை, நிபாவைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, தமிழக எல்லையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுகாதாரத்துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் களியக்காவிளை, காக்கவிளை சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு காய்ச்சல் இருப்பின், அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படுகிறது.

கேரளாவில் இருந்து கடந்த 2 தினங்களில் களிக்காவிளை சோதனைச்சாவடி வழியாக 392 வாகனங்களில் வந்த 1,043 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டதில், யாருக்கும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் மற்றும்குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும் நிபாவைரஸ் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கால்நடைத் துறையினர் மூலம் பன்றிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நிபா வைரஸ் குறித்து பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE