கொல்கத்தாவில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

By KU BUREAU

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் பயிற்சிமருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு மாதத்துக்கு மேல் நீடித்து வந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. ஆனாலும் போராட்டத்தை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நீதிகேட்டு இளநிலை மருத்துவர்கள் கடந்த40 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றம் உத்தரவை மீறியும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் மம்தா பானர்ஜி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

சிறப்புக் குழு: இந்நிலையில் போராட்டம் நடத்தும் இளநிலை மருத்துவர்கள் 42 பேர் முதல்வர் மம்தா பானர்ஜியை கடந்த திங்கள்கிழமை சந்தித்து பேசினர். அவர்களின் பல கோரிக்கைகளை மேற்கு வங்க அரச ஏற்றுக்கொண்டது. அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்க மேற்கு வங்க அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தலைமை செயலாளர், காவல் ஆணையர் மற்றும் இளநிலை மருத்துவர்களின் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் குறை தீர்ப்பு மையம் ஏற்படுத்தப்படவுள்ளது. பெண் மருத்துவர் கொலை வழக்கை தவறாக வழிநடத்தி ஆதாரங்களை அழித்த காவல் ஆணையர் வினீத் கோயல், துணை ஆணையர் அபிஷேக் குப்போ ஆகியோரை மாற்ற மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து அவர்கள் அப்பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

அதிகாரிகள் மாற்றம்: மருத்துவ சேவைகள் துறை இயக்குனர், மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோரும் மருத்துவர்களின் கோரிக்கையின் படி மாற்றம் செய்யப்பட்டனர். மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டும், கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்பட்டும் மருத்துவர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைதீர்ப்பு மையம் மட்டும் இன்னும் அமைக்கப்படவில்லை.

அவசர சிகிச்சை மட்டும்: இது குறித்து இளநிலை மருத்துவர் அனிகேத் மகதா கூறுகையில், ‘‘அனைத்துப் பிரச்சினைகளையும் அரசு தீர்க்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பணிக்கு விரைவில் திரும்ப முடியும். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றாலும், எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார். வெளிநோயாளிகள் பிரிவில் பணியாற்றாமல், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றுவோம் என போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE