நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு உரிய விளக்கம் அளித்துள்ளோம்: அமைச்சர் எஸ்.ரகுபதி

By KU BUREAU

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு கேட்டுள்ள விளக்கங்களுக்கு உரிய பதிலை அளித்துள்ளதால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்துவிலக்களிக்கும் சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும் என்று அமைச்சர் எஸ்.ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களில் 420 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதல்10 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டுஆணைகளை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டக் கல்லூரிகளில் முதுநிலையில் புதிய படிப்புகளை தொடங்க வேண்டும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், புதியபடிப்புகள் தொடங்கப்பட்டு, அதிகமான மாணவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாழடைந்த சிறைகள், மூடப்பட்ட சிறைகளை புதுப்பித்து, சிறைவாசிகள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். ஆளுநரிடம் அனுப்பப்பட்ட கோப்புகளில் ஒரே ஒரு கோப்பு மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதுடன், சில விளக்கங்களையும் தந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்து தமிழக அரசின் கருத்துகள்சரியான வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 4 முறை விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து கடிதங்களுக்கும் உரிய விளக்கம் அளித்துள்ளோம். இதனால், தமிழகத்துக்கு நீட் விலக்கு தரவேண்டிய சூழல் மத்திய அரசுக்கு நிச்சயம் ஏற்படும்.

கடைசியில் 4-வது முறையாக மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், 2 கேள்விகள் கேட்கப்பட்டன. முதலாவதாக, ‘நீட் தேர்வை பல மாநிலங்கள் ஏற்றுள்ளபோதும் தமிழகம் மட்டும் விலக்கு கேட்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி, நீட்தேர்வு இல்லை என்றால் கல்வித் தரம் குறைந்து விடும், நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால்தான் கல்வித்தரம் உயர்வாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு சார்பில், ‘நீட் இல்லாமலேயே இந்திய அளவில் தலைசிறந்த மருத்துவர்களை தந்துள்ள மாநிலம் தமிழகம். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பயிற்சி மையம் நடத்துபவர்கள்தான் பயனடைகின்றனர். தமிழக அரசு பாடத்திட்டத்தின் கல்வித்தரம் உயர்வானது, எனவேநீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்’ என பதிலளித்துள்ளோம்.

அடுத்ததாக, ‘தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா, நீட் தேர்வைஅமல்படுத்துவது குறித்த மத்தியஅரசின் சட்டத்துக்கு முரணாக இருக்கிறதே?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, ‘மத்திய அரசின் நீட் சட்டத்தில் எங்களுக்கு முரண்பாடுகள் உள்ளன. அந்த சட்டம் மூலம்எங்களது மாணவர்கள் பாதிக்கப்படக் கூடும். முரண்கள் இருப்பதால் நீட் எங்களுக்கு தேவை இல்லை. தமிழக மாணவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைதான் இந்த மசோதா’ என்று பதில் அளித்துள்ளோம். விரைவில் டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு குறித்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்துவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE