தமிழகத்தில் உப்பு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை: தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் தகவல்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் உப்பு உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி மைக்கேல் மோத்தா வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் முன்னிலை வகித்தார். தமிழக அரசின் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தலைமை வகித்து மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த உப்பு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து சி.என்.மகேஸ்வரன் பேசியதாவது: "தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் ஹெக்டேரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர். தமிழ்நாடு உப்பு உற்பத்தியாளர்களின் நோடல் ஏஜென்சியாக தமிழ்நாடு உப்பு உற்பத்தி நிறுவனத்தை தமிழக அரசு நியமித்துள்ளது. எனவே, உப்பு உற்பத்தியாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள், உப்பள நிலங்களை குத்தகைக்கு பெறுவதில் உள்ள சிக்கல்கள், உப்பு ஏற்றுமதியில் உள்ள சவால்கள் போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பதற்காகத்தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.

உப்பு தொழிலும் விவசாய தொழில் போன்று பருவ நிலையை சார்ந்து உள்ளது. எனவே, உப்பு தொழிலை விவசாய தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போல உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளனர். இவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

மழை, வெள்ளம், புயல் போன்ற இடர்பாடுகளால் பாதிக்கப்படும் போது, அவற்றில் இருந்து மீட்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உப்பு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினர். இது போன்ற பிரச்சினைகளை தீர்த்து தமிழ்நாட்டில் உப்பு உற்பத்தி தொழிலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாடு உப்பு நிறுவனம் சார்பில் ஆண்டுக்கு 1.5 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப் படுகிறது. இதில் 1.10 லட்சம் டன் உப்பு தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மீதமுள்ள உப்பு நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது" என்று மகேஸ்வரன் கூறினார்.

கூட்டத்தில், தூத்துக்குடி, வேதாரண்யம், கோவளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள், கோரிக்கைகளை தெரிவித்தனர். தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் மேலாளர் (விற்பனை மற்றும் நிர்வாகம்) பிரேம் ஆனந்த் மற்றும் அலுவலர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE