சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்: கடலூரில் தனியார் உணவகத்துக்கு சீல்; உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!

By க. ரமேஷ்

கடலூர்: கடலூரில் தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்ட இருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்த தனியார் உணவகத்தை பூட்டி சீல் வைத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தனியார் ஃபேமிலி ரெஸ்டாரன்ட் இயங்கி வருகிறது. இதில் பலர் உணவருந்திச் செல்கின்றனர். இந்த நிலையில் இந்த உணவகத்தில் நேற்று தாழங்குடவைச் சேர்ந்த புண்ணியகோடி மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர் குழந்தையுடன் வந்து உணவுப் பார்சல் வாங்கிச் சென்றுள்ளனர்

இரவு அவர்கள் அந்த உணவைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் புண்ணியகோடி, நந்தினி, அவர்களின் ஆறு வயது சிறுமி ஆகியேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூவருக்கும் அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர் உணவகத்தில் விசாரணை மேற்கொண்டனர். கடலூர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அங்கு வந்து விசாரணை நடத்தி உணவகத்தை இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர். உணவகத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE