கும்பகோணம்: கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. சார் ஆட்சியர் ஹரித்யா எஸ்.விஜயன் தலைமை வகித்தார். இதில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: ''கும்பகோணத்தில் 3 வாய்க்கால்களை காணவில்லை என 2 ஆண்டுகளாக புகார் மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அந்த வாய்க்கால்களைக் கண்டுபிடித்து தூர் வார வேண்டும். விவசாயிகள் குறை கேட்கும் கூட்டமாக இருக்கக்கூடாது, விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் கூட்டமாகத் தான் இருக்கும் என்பதற்கு உறுதி தர வேண்டும். விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அணைக்கரையில் உலவும் முதலையால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டைப் பாரபட்சமின்றி வழங்கவும், வெளிப்படைத் தன்மையுடன் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைவருக்கும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும்.
கும்பகோணம், பாபநாசம் வட்டங்களில் அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தியில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. அதற்கான நடவடிக்கையும் இல்லை. இதற்கு உடனடியாக பதில் வழங்காவிட்டால், அந்தந்த வட்ட அலுவலகங்களுக்கு முன்பு மனுக்களைக் குப்பையில் கொட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
» புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே பிரபல காபி பார் அகற்றம்
» நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்
அய்யம்பேட்டையில் உள்ள கருப்பட்டையான் குளத்தை தூர்வாரி, சுற்றிலும் தடுப்புச் சுவர் எழுப்பி, நீர் நிரப்ப வேண்டும். 15 கிராமங்களில், 1000 ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்குப் பயன்பெறும் உமையாள்புரம் பெரிய வாய்க்காலை தூர் வார வேண்டும். பாபநாசம் வட்டத்தில் கொள்ளிடக் கரைகளை பலப்படுத்த வேண்டும். பாபாநசத்தில் நவீன அரிசி ஆலையைத் தொடங்க வேண்டும். குடிநீர் குழாய் பதித்ததால் சேதமடைந்த சாலைகளைச் சீர் செய்ய வேண்டும்.
கும்பகோணம் மாநகராட்சி வழியாகக் கிராமங்களுக்கு செல்லும் தேப்பெருமாநல்லூர், உள்ளூர், திருபுவனம், இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில், நீர் செல்லத் தடை ஏற்படுத்தி, வாய்க்கால் மேல் கான்கிரீட்டாலான பாலம் அமைத்து வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்ற வேண்டும்.'' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்குமார் தலைமையிலான விவசாயிகள், வாய்க்கால்கள் சேதம் குறித்து தாங்கள் கையில் எடுத்துவந்திருந்த புகைப்படங்களைக் காட்டி சார் ஆட்சியர் மேஜை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், அம்மாப்பேட்டை ஒன்றியம், புத்தூர் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளதைப் சீர்செய்து, தூர் வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். அம்மாப்பேட்டை, பூண்டி, சாலியமங்கலம், கம்பர் நத்தம், அருந்தவபுரம், புளியக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடனுக்கு விண்ணப்பித்தும், கடன் வழங்காமல் காலம் தாழ்த்தும் உதவிக் கள அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன முழக்கமிட்டனர்.
தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் அந்த வாய்க்காலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக பதிலளித்த சார் ஆட்சியர் ஹரித்யா எஸ்.விஜயன், ''விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறை மூலம் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' எனத் தெரிவித்தார்.