காஞ்சிபுரம்: உயிர் உரங்களுக்கு மானியம் வழங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் 

By இரா.ஜெயபிரகாஷ்

காஞ்சிபுரம்: இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர் இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான விதைகள், மற்றும் உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்களையும் மானிய விலையில் வழங்க வலியுறுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், ஏரி, குளங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் சிலர் வலியுறுத்தினர். திருமுக்கூடல் பாலாறு மேம்பாலத்தின் மீது மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாய கடன் வழங்க வேண்டும், பயிர் காப்பீட்டுத் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், டிராக்டர் மற்றும் கதிர் அறுக்கும் இயந்திரங்கள், உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க. ஆர்த்தி, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் பா. ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ரா.ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE