குன்னூர் பழ காட்சி தொடக்கம்

By KU BUREAU

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 64-வது பழ கண்காட்சியை முன்னிட்டு, குழந்தைகளைக் கவரும்வகையில் 5.5 டன் பழங்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கோடை சீசனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்வருகின்றனர். இந்நிலையில், கோடை விழாவின் இறுதி நிகழ்வான 64-வது பழ கண்காட்சி நேற்றுதொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கிவைத்தார்.

ஆண்டுதோறும் 2 நாட்கள் நடைபெறும் பழ கண்காட்சி, தற்போது சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் ஆனதையொட்டி 3 நாட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியின் சிறப்பம்சமாக 5 டன் அளவிலான பழங்களைக் கொண்டு, 9 உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திராட்சைகளால் 15 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள கிங்காங் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல, இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும்‌ வகையில் ‘கோ ஆர்கானிக்’ போன்ற வாசகங்கள்‌ எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

‘டம்பெல் டக்' வடிவமைப்பு

சிம்ஸ் பூங்கா உருவாக்கப்பட்டு 150 வருடங்களானதைக் கொண்டாடும்‌ வகையில்‌, தோட்டக்கலைத்‌ துறை மூலம்‌ பல்வேறு வகையான150 ரக பழங்கள்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களைக் கவரும்‌ வகையில்‌, கார்ட்டூன்‌ உருவங்களான டம்பெல்‌ டக்‌, மினியன்‌, டைனோசர்‌, பிக்காச்சு, நத்தை போன்ற உருவங்கள்‌ 1.50டன்‌ எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, செரி, பேரீச்சைப் பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.

பிற மாவட்டங்களின் விளையும் பழங்களின்‌ வளங்களை பறைசாற்றும்‌ வகையில், பல்வேறு காட்சித் திடல்கள்‌ அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE