கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டது திமுக தலைமை. இதனால் திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி அடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில் இப்போது பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி எம்பி-யாக இருக்கிறார். கட்சிக்குள் இவருக்கு ஏகப்பட்ட அதிருப்திகள் இருக்கும் நிலையில் தொகுதிப் பக்கம் அவ்வளவாய் எட்டிப் பார்க்காதவர் என்ற பொதுமக்களின் அதிருப்தியும் இருக்கிறது. இருந்த போதும் வழக்கில் சிக்கி இருக்கும் பொன்முடியை ஆறுதல்படுத்துவதற்காக கௌதம சிகாமணிக்கு மீண்டும் சீட் வழங்குவார் ஸ்டாலின் என பேச்சு இருந்தது.
ஆனால், அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கி புதுமுகமான மலையரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். பொன்முடி மீது மட்டுமல்லாது கௌதம சிகாமணி மீதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக அமலாக்கத்துறை வழக்கு விசாரணையில் இருக்கிறது. கௌதம சிகாமணிக்கு மீண்டும் சீட் கொடுத்திருந்தால் அவர் வெற்றிபெறவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அவர் அப்படி வெற்றிபெற்று ஒருவேளை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியே வந்தால் அமலாக்கத்துறை வழக்கால் அவரது பதவிக்கே சிக்கல் வரலாம்.
அப்படியொரு நிலை வந்தால் பதவிபறிப்புக்கு ஆளாகி இடைத் தேர்தலை சந்திக்க வேண்டிய இக்கட்டுக்கு திமுக ஆளாகலாம். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே கௌதம சிகாமணியை வேட்பாளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக எ.வ.வேலு நியமிக்கப்பட்ட பிறகு பொன்முடியின் ஆதரவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாவட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு வருவதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு. இந்த நிலையில், இப்போது பொன்முடியின் மகனே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியிலும் வேலுவின் ஆலோசனை இருக்கலாம் என்கிறார்கள். மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மலையரசனும் எ.வ.வேலுவின் சிபாரிசு தான் என்கிறார்கள்.
இப்படி தானும் தனது மகனும் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒரேயடியாக ஓரங்கட்டப்பட்டிருப்பதால் திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் பொன்முடிக்கு எதிரான ஊழல் வழக்கில் அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டால், அவரால் அடுத்து வரும் இரண்டு தேர்தல் களில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படலாம். அப்படியொரு சூழல் வந்தால் அந்த நேரத்தில் கௌதம சிகாமணியை திருக்கோவிலூர் தொகுதியில் திமுக நிறுத்தும் என்ற பேச்சும் இருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்... வேட்பாளர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!
நாளை ஆழி தேரோட்டம்... ரம்மியமாக ரெடியாகும் திருவாரூர் தேர்... உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
ஐ.பி.எல். 2024 தொடக்க விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் இவர்கள்தான்..