‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

By KU BUREAU

சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கக்கூடியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 18-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எனும் முன்மொழிவு நடைமுறைக்கு சாத்தியமற்றது, இந்தியாவின் பரந்துபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாதது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைப்பது ஆகும். வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலங்களில் தேர்தல் நடப்பது, அந்தந்த மாநிலத்துக்குரிய பிரச்சினைகள், ஆட்சி முன்னுரிமைகள் உள்ளிட்ட காரணங்களால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

எதார்த்தத்துக்கு முரணாக, அனைத்து மாநில அரசுகளின் ஆட்சிக் காலத்தையும் ஒரே வரிசையில் கொண்டுவருவது என்பது, இயல்பாக நடக்கும் அரசு நிர்வாகத்துக்கு இடைஞ்சலை உருவாக்கும். இந்த முன்மொழிவு என்பதேமொத்தத்தில் பாஜகவின் ஆணவத்தை திருப்திப்படுத்துவதற்கான நகர்வுதானே தவிர, இதை ஒருபோதும் அவர்களால் நடைமுறைப்படுத்த இயலாது. ஒற்றைக் கட்சியின்பேராசைக்கு ஏதுவாக இந்திய ஜனநாயகம் வளைக்கப்பட கூடாது. இத்தகைய திசைதிருப்பல் உத்திகளில் தனது ஆற்றலை வீணடிப்பதை விட்டுவிட்டு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் ஆகிய முக்கிய விவகாரங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக தமிழகசட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அரசினர் தனி தீர்மானம் கொண்டு வந்தார். பேரவையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதுமுற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. சுதந்திரமான, நேர்மையான தேர்தல் மற்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. இதன்மூலம் சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதால் இதை எதிர்க்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து மத்தியில் ஆட்சிகவிழ்ந்தால், அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்த வேண்டியிருந்தால், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா? நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவை மாநில நிர்வாக அமைப்புகள் எனும்போது, இவற்றுக்கும் சட்டப்பேரவை, மக்களவையுடன் தேர்தல் நடத்துவது அரசியல் சட்ட விரோதமானது, மாநில உரிமைகளை பறிக்கக்கூடியது. எனவே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கடுமையாக எதிர்த்தாக வேண்டும் என்று அந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE