திருமாவளவனுக்காக அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்யக்கூடாது: ஜக்கையன் வலியுறுத்தல்

By KU BUREAU

மதுரை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். அருந்ததியர் இல்லாத வேளையில், பிற சமூக மக்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற அரசாணை எண் 61-ஐ ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் தொகைக்கேற்ப அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆதித்தமிழர் கட்சி சார்பில் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் ஜக்கையன், தமிழ் தேசியவிடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் ஜக்கையன் கூறியதாவது: அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உள்இட ஒதுக்கீடுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட மக்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள்மட்டுமே இடஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர். அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூகநீதிக்கு எதிரானது. அருந்ததியர் மக்களுக்கென திமுக கொண்டுவந்த உள் இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் கடமை திமுக அரசுக்கு உள்ளது. திருமாவளவன் கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை திமுக அரசு ரத்து செய்யக்கூடாது. இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்துப் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE