பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை, பாலக்காடு காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள், குற்றத் தடுப்புப் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக கோவை மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.19) மாலை நடந்தது.

இக்கூட்டத்திற்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர். இக்கூட்டம் குறித்து மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ‘‘கோவை - பாலக்காடு இடையே குற்றவாளிகளின் செயல்பாடுகள் பற்றிய முன்கூட்டியே உளவுத்துறை தகவல்களை சேகரித்தல் மற்றும் பரிமாற்றம் செய்து கொள்வது, லாட்டரி விற்பனை தடுப்பு, போலி மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை தடுத்தல், கனிமங்கள், மணல் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கடத்துவதை தடுத்தல் தொடர்பான நடவடிக்கைகள், இரு மாவட்ட எல்லையோர சோதனைச் சாவடிகள் மூலம் எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இரு மாநிலங்களின் தனிப்படைகளை ஒருங்கிணைப்பது, வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட கைதிகளை கைது செய்வது, சட்டவிரோத செயல்களை தடுத்தல், கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதை தடுத்தல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள், மாவோயிஸ்ட் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டன” என்றனர். இக்கூட்டத்தில் கோவை மற்றும் பாலக்காடு மாவட்ட காவல்துறை கூடுதல் எஸ்.பிக்கள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE