சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம்என்ற கட்சியை தொடங்கினார். ‘‘மக்களவை தேர்தலில் யாருக்கும்ஆதரவு இல்லை. 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு’’ என்றும் தெரிவித்திருந்தார்.
கட்சி தொடங்குவதற்கு முன்பு, கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 234 தொகுதிகளிலும், முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ,மாணவிகளை அழைத்து பாராட்டு விழா நடத்தினார். அதில், சான்றிதழும், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கினார்.
அப்போது, பிளஸ் 2 தேர்வில் 600-க்கு600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் விஜய் இவ்வாறு விழா நடத்தியது அரசியலாக பார்க்கப்பட்டாலும், அவரது இந்த முயற்சி பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், ‘விரைவில் சந்திப்போம்’ என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
» 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
» ஆர்.ஏ.புரம் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில்முதல் 3 இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளின் பெயர் பட்டியலை விஜய் கட்சி நிர்வாகிகள் சேகரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: மாணவர்களின் விவரங்கள், பெற்றோர் பெயர், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பெற்று கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளோம். மாணவர்களை விஜய் அடுத்த மாதம் சந்திக்க இருக்கிறார்.
கடந்த ஆண்டுபோலவே, தற்போதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு, சான்றிதழை விஜய் வழங்குவார். வார இறுதி நாளில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும். எனினும், தேதி உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.