33% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றாத காங்., பாஜக - ஜனநாயக மாதர் சங்கம் வருத்தம்

By எஸ்.ராஜாசெல்லம்

தருமபுரி: காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலுமே பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப் படவில்லை என கேரள மாநில முன்னாள் அமைச்சரும், ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளருமான ஸ்ரீமதி கூறியுள்ளார்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளரும், கேரள மாநில முன்னாள் அமைச்சருமான ஸ்ரீமதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் இந்தியா முழுக்க 1 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில் 7 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் போர்க்குணம் மிக்க வலுவான அமைப்பாக ஜனநாயக மாதர் சங்கம் செயல்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளும், பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. பணியிடங்களில் பெண்களுக்கு பாலின பாகுபாடு நிலவுவதுடன், பாதுகாப்பற்ற சூழலும் காணப்படுகிறது. பாஜக-வுக்கு பெண்கள் மீதான சமூக அந்தஸ்து குறைந்து வருகிறது. பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு காங்கிரஸ், பாஜக என எந்த ஆட்சியிலும் நிறைவேற்றப் படவில்லை.

சுஸ்மா ஸ்வராஜ் இருந்தபோது, அன்றைய பாஜக ஆட்சியில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை. தற்போதைய பாஜக அரசு, தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து முடித்த பின்னர் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவதாக கூறுகின்றனர். பாஜக அரசு ஏழைகள் மீது வரியை சுமத்தியுள்ளது. பெண்கள் முன்னேற்றத்துக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை. இந்த அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாகத் தான் உள்ளது" என்று ஸ்ரீமதி கூறினார்.

இந்நிகழச்சியின்‌போது, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுகந்தி, மாநில தலைவர் வாலண்டினா, பொருளாளர் பிரமிளா, வழக்கறிஞர் நிர்மலாராணி, தருமபுரி மாவட்ட செயலாளர் மல்லிகா, மாவட்ட தலைவர் ஜெயா, பொருளாளர் வளர்மதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE