திருச்சி: தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு மொட்டை அடித்திருப்பது நாட்டுக்கே அவமானம் என மனித நேய ஜனநாய கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி கூறியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று திருச்சிக்கு வந்திருந்த மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமீமுன் அன்சாரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது; "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது ஏற்கத்தக்க நிகழ்வு அல்ல. இந்திய ஜனநாயக அமைப்பை மாற்றியமைக்கும் நோக்கிலும், மாநிலங்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் விதமாகவும், இந்தியாவில் அதிபர் ஆட்சி முறையை கொண்டு வருவதற்காகவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்திய - இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு உயிர் இழப்பதும், தமிழக மீனவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை அபகரித்து செல்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று இலங்கை அரசு கைது செய்த தமிழக மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதித்ததுடன், அவர்களுக்கு மொட்டை அடித்தது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது இந்தியாவுக்கான அவமானம். இந்த சர்வதேச விதி மீறலை கண்டிக்கும் விதமாக இலங்கை தூதரை நேரில் வரவழைத்து இந்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்.
» ராஜபாளையம்: 103 ஏக்கர் கோயில் நில ஒப்பந்தத்தை ரத்து செய்து சுவாதீனம் செய்தது அறநிலையத்துறை
» ராமேஸ்வரம் - புவனேஷ்வர், புதுச்சேரி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்த புதிய அறிவிப்பு
மதுவுக்கு எதிராக ஆன்மிக தலைவர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்த தலைவர்களை அழைத்து மது ஒழிப்பு நிகழ்ச்சிகளை மனித நேய ஜனநாயக கட்சி நடத்தும். பூரண மது விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்வோம். மதுக்கடைகள் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்க்கிறோம். அடுத்த ஓராண்டுக்குள் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வருக்கு முன் வைக்கிறோம்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவருக்கு முதல்வர், துணை முதல்வர் பதவி வழங்குவது அந்தந்த கட்சியின் உள் விவகாரம். உதயநிதிக்கு அதற்கான தகுதி உள்ளது. அவருக்கு துணை முதல்வர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால் மஜக வரவேற்கும். நடிகர் விஜய் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தது வரவேற்கக் கூடிய நிகழ்வு.
தமிழகத்தில் பெரியார் இல்லாமல் அரசியல் இல்லை என்பதை விஜய் மிக நன்றாக புரிந்து வைத்துள்ளார். எனவே, அரசியலில் இருந்து பெரியாரை ஒருபோதும் பிரிக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ரூ.6,000 கோடி மதிப்புள்ள அறநிலையத் துறை சொத்துக்களை மீட்டு எடுத்தது பாராட்டுக்குறியது.
இதேபோல் நாடு முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துக்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று இரு நாடுகளுக்கு இடையில் சுமுக உறவை ஏற்படுத்தவும், போரை முற்றிலுமாக நிறுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அவருடைய இந்த முயற்சி வரவேற்கக் கூடியது தான். அதே சமயம் நம்முடைய நாட்டில் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கும் பிரதமர் ஆறுதல் கூற வேண்டும்" என்று தமீமுன் அன்சாரி கூறினார்.