திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக தென்னை மரங்கள் அகற்றம் - விவசாயிகள் எதிர்ப்பால் பதற்றம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டி அருகே, நான்கு வழி சாலை அமைப்பதற்காக, விளை நிலங்களில் உள்ள தென்னை மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தருமத்துபட்டியில் இருந்து கோம்பை செல்லும் வழியில், தருமத்துப்பட்டி உட்பட 10 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட பாறைகோட்டை முத்தாலம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் பூசாரியாக தருமத்துப் பட்டியைச் சேர்ந்த நல்லாள் என்பவர் உள்ளார். கோயிலுக்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 1989ம் ஆண்டு முதல் நல்லாள் மற்றும் அவரது வாரிசுகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளது.

மேலும், தோட்டத்து பகுதியில் நல்லாளின் வாரிசுகள் வீடுகள் கட்டி குடியிருந்தும் வருகின்றனர். இந்நிலையில், ஒட்டன்சத்திரம் அருகே பழக்கனூத்தில் இருந்து செம்பட்டி வழியாக கொடை ரோடு டோல் கேட் வரை புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் நல்லாளின் சுமார் 35 சென்ட் நிலத்தில் தென்னை மரங்கள் உள்ள பகுதி வழியாக, நான்கு வழிச்சாலை செல்ல உள்ளதால் அங்குள்ள தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணியில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் மூலம் தென்னை மரங்களை சாய்த்தனர். இதற்கு சிலர் தென்னை மரத்தின் மீது ஏறியும், பொக்லைன் இயந்திரத்தை தாக்கியும் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர். தென்னை மரங்கள் அகற்றத்தை தடுக்க முயன்றவர்களை போலீஸார் இழுத்துச்சென்று வேனில் ஏற்றினர். தொடர்ந்து, திட்டமிட்டபடி சாலை செல்லும் 35 சென்ட் இடத்தில் இருந்த தென்னை மரங்களை முற்றிலுமாக அகற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE