புரட்டாசி மாதம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்கள் விலை சரிவு!

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் விலை குறையத் துவங்கி உள்ளது.

கடந்த செப்டம்பர் 17ம் தேதி அன்று புரட்டாசி மாதம் பிறந்தது. பெருமாளுக்கு இந்த மாதம் உகந்த மாதம் என்பதால், பலர் புரட்டாசி மாதம் இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை உண்பது கிடையாது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, கீழக்கரை, தொண்டி, ராமநாதபுரம் ஆகிய மீன் மார்க்கெட்களில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாக காணப்படுகிறது. மேலும் மீன் விலையும் குறையத் துவங்கியுள்ளது.

செப்டம்பர் மாத துவக்கத்தில் கிலோ 1,000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட சீலா மீன் ரூ.800-க்கும், 500 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட பாறை, விலை மீன்கள் ரூ.300-க்கும், ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட இறால் மற்றும் நண்டு ரூ.200-க்கும், 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்ட மத்தி மற்றும் சூடை மீன் 100 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் மீனின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக மொத்த மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE