ராஜபாளையம்: 103 ஏக்கர் கோயில் நில ஒப்பந்தத்தை ரத்து செய்து சுவாதீனம் செய்தது அறநிலையத்துறை

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தேவதானம் நற்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு பல ஆண்டுகளாக குத்தகை பணம் செலுத்தாததால், ஒப்பந்தத்தை ரத்து செய்து அறநிலையத் துறை அதிகாரிகள் நிலத்தை சுவாதீனம் செய்தனர்.

ராஜபாளையம் அருகே தேவதானம் நற்சாடை தவிர்க்க அருளிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் தேவதானம் கோவிலூரில் உள்ள 103 ஏக்கர் 43 சென்ட் நிலத்தை அம்மையப்பா விவசாய குத்தகைதாரர் கூட்டுறவு சங்கம் சார்பில் குத்தகைக்கு எடுத்து அச்சங்க உறுப்பினர்கள் விவசாயம் செய்துவந்தனர். இந்த நிலத்திற்கு பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாததால், 3148.10.2 கோட்டை நெல் மற்றும் 2,410 வைக்கோல் கட்டு குத்தகை பாக்கி இருந்து வந்துள்ளது.

இந்தக் குத்தகையை செலுத்தாததால், மதுரை வருவாய் நீதிமன்ற உத்தரவுப்படி குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய அறநிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டார். அதன்படி இன்று அறநிலையத் துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில் ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் மாரிமுத்து, கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்தினகுமார், செயல் அலுவலர் கலாராணி மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் 103 ஏக்கர் நிலத்தை மீட்டு, அறநிலையத் துறைக்கு சுவாதீனம் எடுத்தனர். இது தொடர்பான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE