செங்கல்பட்டு: புதிய வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயக்குவது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை சாா்பில் புதிய மினி பேருந்துகள் இயக்க சாத்தியமான வழித்தடம் தொடா்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது 2,950 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, மக்களுக்கு பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக, மக்கள் நலன் கருதி ‘புதிய விரிவான மினி பேருந்து திட்டம் - 2024‘ என்ற வரைவு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் சாத்தியமான மினி பஸ் வழித்தடங்களை கண்டறிந்து, அறிக்கை சமா்ப்பிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு அருகில் உள்ள பேருந்துகள் சென்றடையும் வகையில், சாத்தியமான 35 மினி பஸ் வழித்தடங்களை ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடை நம்பி தலைமையில் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ள வழித்தடங்கள் குறித்த ஊராட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் யுவராஜ், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் பகுதிகளுக்கு பேருந்து சேவை தேவை என 28 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் ஹமீதா பானு, முரளி, செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE