ஜாபர் சாதிக்குக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கில் இயக்குநர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை

By KU BUREAU

சென்னை: திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்குக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீர் உள்பட 12 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தலில்ஈடுபட்டதாக கைதான திரைப்படத்தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘ ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குநர் அமீர்மற்றும் ஜாபர் சாதிக்கின் படத் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் என மொத்தம் 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துநிறுவனங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து முடக்கவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகையில் 12-வதுநபராகச் சேர்க்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் அமீர், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE