மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை தொடக்கம்

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை நேற்று தொடங்கியது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட ஒப்பந்தக் காலம் 2028-ம் ஆண்டுடன் முடிவடைகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம், குடிநீர்உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தொழிலாளர்களின் ஒப்பந்தக் காலம் முடிவடையும் முன்னரே, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட மனித உரிமை ஆணையம், தலைமை விசாரணை இயக்குநர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு மாஞ்சோலையில் விசாரணை மேற்கொண்டு, ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தேசிய மனித உரிமைஆணைய விசாரணைக் குழு அதிகாரிகள் ரவி சிங், யோகேந்திர குமார் திரிபாதி ஆகியோர் நெல்லைக்கு நேற்று வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், எஸ்.பி. சிலம்பரசன், தொழிலாளர் உதவி ஆணையர் (தோட்டங்கள் பிரிவு) விக்டோரியா, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் இளையராஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். மேலும், புதியதமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடமும் உரையாடினர்.

பின்னர், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாக அலுவலகம், தொழிலாளர் குடியிருப்பு ஆகிய இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்துவோம். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள், எங்களிடம் தெரிவிக்கலாம். வரும் 21-ம் தேதி வரைஇந்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை, எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. மேலும், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தாக்கல் செய்த அறிக்கையை கிருஷ்ணசாமி அளித்துள்ளார்" என்றனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE