'இரட்டை இலை சின்னம் எனக்கே கிடைக்க வேண்டும் முருகா'!... திருச்செந்தூர் கோயிலில் ஓபிஎஸ் மனமுருக வேண்டுதல்!

By காமதேனு

முன்னாள் முதல்வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை 4 மணி முதல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்து வழிபட்டார்.

திருச்செந்தூர் கோயில்

உட்கட்சி பிரச்சினை காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது அணியினர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

அடுத்த மாதம் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். தற்போதைய நிலையில் எடப்பாடி பழனிசாமி வசமே கட்சி, கொடி, சின்னம் ஆகியவை உள்ளது. ஆனால் தாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாக கூறும் ஓபிஎஸ் அணி சின்னத்தை கைப்பற்றவும், அப்படி கிடைக்காவிட்டால் அதனை முடக்கவும் முயல்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். இன்று அதிகாலை நான்கு மணிக்கு கோயிலுக்கு வந்து விட்ட அவர் கோயிலில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற முதல் கால பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆகியவற்றில் பங்கேற்று தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் செய்தார்.

இன்று வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்து அதன் மூலம் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE