அழகர்கோவில் அருகே ரூ.9.25 கோடியில் நவீன வசதிகளுடன் கள்ளழகர் திருமண மண்டபம்

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மதுரை அழகர்கோவில் அருகே கள்ளந்திரியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.9.25 கோடியில் லிப்ட, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கள்ளழகர் திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரை கூறியுள்ளார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி கள்ளந்திரி - பூவைக்குடி கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான காலியிடத்தில் கள்ளழகர் திருமண மண்டபம் ரூ.9.25 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணியை தமிழக முதல்வர் பிப்.26ல் அடிக்கல் நாட்டினார். திருமண மண்டபத்தின் கீழ் தளம் 11,513 சதுரடியில் 270 பேர் உணவு அருந்தும் வகையில் கட்டப்படுகிறது. இவற்றில் சமையலறை, பொருட்கள் வைப்பறை, கை கழுவும் பகுதி, மின் தூக்கி (லிப்ட்), மின்சார அறை, பதிவறை, தலா 3 ஆண்கள், பெண்கள் கழிப்பறைகள் கட்டப்படுகிறது.

அடு்த்ததாக முதல் தளம் 11,739 சதுரடியில் கழிப்பறையுடன் கூடிய மணமகள் அறை, மணமகன் அறை, 700 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள், பதிவறை, பொருட்கள் வைப்பு அறை, மின் அறை, மாடம் மற்றும் மின் தூக்கி வசதியுடன் கட்டப்படுகிறது. இரண்டாம் தளம் 7,166 சதுரடியில் கழிப்பறை வசதியுடன் சாதாரண தங்கும் அறைகள்- 11, முக்கிய பிரமுகர் அறை-2, மாடம், மின் தூக்கி மற்றும் திறந்தவெளி மொட்டை மாடி, 4,185 சதுரடியில் கட்டப்படவுள்ளது.

மேலும் பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் மண்டபத்தின் பின்புறம் இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்த வசதிகள் அமையவுள்ளன. நடந்து வரும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறையின் மதுரை மண்டல இணை ஆணையரும், கள்ளழகர் கோயில் பொறுப்பு துணை ஆணையருமான க.செல்லத்துரை ஆய்வு செய்தார். பின்னர் ஆய்வு குறித்து பேசிய அவர், நவீன வசதிகளுடன் கள்ளழகர் திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE