3 வாரங்களிலேயே பெயர்ந்து விழும் வீட்டின் மேற்கூரை - இலங்கைத் தமிழர்கள் வேதனை; ஆம்பூர் அதிர்ச்சி

By KU BUREAU

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்ட 3 வாரங்களிலேயே மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, சேதமான வீட்டை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மின்னூர் மற்றும் சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வந்த இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.12.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 236 வீடுகள் கட்டப்பட்டன.

கடந்த மாதம் ஆக.29-ம் தேதி பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சிறுபான் மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் புதிய குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, புதிய வீடுகளில் இலங்கை தமிழர்கள் 30-க்கும் மேற்பட்டோர் தங்களது குடும்பத்தாருடன் குடியேறினர்.

இந்நிலையில், புதிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு 3 வாரங்களே ஆன நிலையில் இலங்கை தமிழர் காந்தன் - விஜயா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் நேற்று புதிய வீட்டில் இருந்தபோது, வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதைக்கண்டதும், அச்சமடைந்த காந்தன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.

இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வீட்டை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்
நேற்று ஆய்வு செய்தார். அருகில், திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர்.

இதையடுத்து, அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று விசாரித்தபோது வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு கீழே விழுந்தது தெரியவந்தது. இதேபோல, பலரது வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டிருப்பதும், ஆங்காங்கே சிமென்ட் ஈரப்பதத்துடன் பெயர்ந்து வருவதாக கூறினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘பல கோடி செலவழித்து எங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு வீடும் தரமாக கட்டப்பட்டுள்ளதாகவும், அனைத்து வீடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். ஆனால், வீட்டில் குடியேறிய 3 வாரங்களிலேயே சில வீடுகளில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து வருகிறது. கால்வாய் மற்றும் கழிப்பறைகளுக்கான குழாய்கள் மாறி, மாறி அமைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்பு பொருட்களும் தரமற்ற முறையில் உள்ளன.

3 வாரம் கூட முழுமையாக நிறைவடைய வில்லை. அதற்குள்ளாக, சுவர்களில் விரிசல் விழுந்துள்ளன. ஜன்னல் மற்றும் கதவுகளும் சரியில்லை. சில வீடுகளில் ஏற்பட்ட சிறு, சிறு சேதாரத்தை வெளியே சொல்லாமல் பயனாளிகளே சரி செய்து கொண்டனர். தற்போது, ஒரு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த வீடுகளில் வசிக்கவே எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த தகவல் வெளியானதும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் சம்பவ இடத்துக்கு சென்று நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ ஆம்பூர் அடுத்த மின்னூர் மற்றும் சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு சமீபத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 236 வீடுகள் வழங்கப்பட்டன. இதில், ஒரு வீட்டில் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தப்பட்டது.

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும். சிமென்ட் பெயர்ந்த வீட்டினை சரி செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE