தெருக்களுக்கு அழைத்துச் செல்லும் கூகுள் மேப் - இது ராணிப்பேட்டை ‘டரியல்’

By KU BUREAU

ராணிப்பேட்டை: கூகுள் மேப்பினை நம்பி வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் ராணிப்பேட்டை தெருக் களின் வழியாக வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம் பிரிக்கப்பட்டது. ராணிப்பேட்டை நகரை பொறுத்தவரையில் போதுமான சாலை உள்கட்டமைப்புகள் உள்ளன. இதன் காரணமாக, மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, வாலாஜாவை காட்டிலும் நெரிசல் குறைந்த பகுதியாக காணப்படுகிறது. ராணிப்பேட்டை எம்பிடி சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் வெளிமாநில கார்கள் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ராணிப்பேட்டை நகரில் எம்பிடி சாலையில் இருந்த பழைய ரயில்வே பாலத்தை இடித்து விட்டு, நவல்பூர்-காரையை இணைக்கும் வகையில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சென்னை மற்றும் சித்தூர் வழியாக இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணகிரி ட்ரங்க் ரோடு மற்றும் ரயில்நிலையம் சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

இதில், சென்னை, வாலாஜா செல்லும் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் முறையாக சிப்காட் மற்றும் சித்தூர் சென்று விடுகின்றன. ஆனால், சித்தூர் மற்றும் சிப்காட் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சென்னை நோக்கி செல்ல, பெரும்பாலானவை ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகிலிருந்து பிரிந்து செல்லாமல், ராணிப்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆர்.ஆர். சாலை வழியாக வந்து விடுகின்றன.

பல நேரங்களில் கனரக வாகனங்களும் இவ்வழியாக வந்துவிடுகின்றன. இதனால், ஆர்.ஆர். சாலை மற்றும் கிருஷ்ணகிரி ட்ரங்க் ரோடுசந்திப்பு பகுதியான மசூதி அருகேஉள்ள சாலையில் அடிக்கடிபோக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியாக வரும் வாகனங்கள் ராணிப்பேட்டை பாலாறு அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து தான் சென்னை, ஆற்காடு செல்ல வேண்டும்.

குறிப்பாக, ஆந்திரா, கர்நாடாகாவில் இருந்து பெரும்பாலான கார்கள் சென்னை நோக்கி செல்வதற்காக, மசூதி சந்திப்பை கடந்து நேராக வக்கீல் மற்றும் காந்திநகர் தெருக்களின் வழியாக நுழைந்து விடுகின்றன. இந்த தெருக்கள் குறுகியதாக இருப்பதாலும், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்து அச்சத்திலும் அப்பகுதியினர் உள்ளனர்.

கைபேசிகளில் உள்ள கூகுள் மேப்பினை பார்த்து பெரும்பாலான கார்கள் இவ் வழியாக வந்து விடுவதாக கூறப்படுகிறது. எனவே, வெளியூர் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை செல்ல வக்கீல் மற்றும் காந்தி தெருக்களின் வழியாக செல்லாத வகையில் இந்த சிக்கல்களை சரி செய்ய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE