மறைமலைநகர்: மறைமலைநகரில் புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கடையை மூட முயன்று முற்றுகையிட்டனர். இதனால் அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அண்ணா சாலையில் 2, கூடலூர் பகுதியில் ஒன்று என ஏற்கெனவே மூன்று டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. தற்போது நான்காவதாக 13-ம் வார்டில் பாவேந்தர் சாலையில் இன்னொரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், குடியிருப்புகள், தேவாலயம் உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் இந்த புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
மதுப் பிரியர்கள் இந்தக் கடையில் மதுக் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் மாணவ - மாணவியர், பெண்கள், முதியோர், குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தக் கடையை மூடக் கோரி பாவேந்தர் சாலையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டாஸ்மாக் கடையை உடனே மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
» துணை முதல்வர் ஆகிறேனா? - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பதில்!
» திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சாரைப் பாம்பு: அலறியடித்து ஓடிய ஊழியர்கள்
தொடர்ந்து டாஸ்மாக் மதுபான கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் கடையை மூடும் வரை ஆர்ப்பாட்டம், போராட்டம் தொடரும் என அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பார்த்தசாரதி, நகர ஜெ பேரவை செயலாளர் தசரதன், இலக்கிய அணி செயலாளர் வேலாயுதம், மகளின் அணி செயலாளர் உஷா முருகன், கவுன்சிலர் யுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விசிக சார்பில் மறைமலை நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.