திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை திடீரென சாரைப் பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் பதிவேடுகள் வைக்கும் அறையில் சுமார் 7 அடி நீளம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்ட அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்தப்படியே வெளியே ஓடி வந்தனர்.
இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று கோப்புகளுக்கு இடையே ஒளிந்திருந்த பாம்பை லாகவமாக பிடித்து காட்டில் கொண்டுபோய் விட்டனர். இச்சம்பவத்தால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.