அறுவடை நேரத்தில் பெய்த மழை: பழநியில் 400 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பகுதியில் நெல் அறுவடை நேரத்தில் பெய்த திடீர் மழையால் 400 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி, பாலசமுத்திரம், அ.கலையம்புத்தூர், காமடை, கோதைமங்கலம், மானூர் உள்ளிட்ட பகுதிகளில் 5,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சில இடங்களில் நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. அதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயலில் தண்ணீர் புகுந்தது. நெற்பயிர்களும் நீரில் மூழ்கி கீழே சாய்ந்தன. தற்போது வயல் சேறும் சகதியுமாக இருப்பதால் கதிர் அடிக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால் முளைக்க தொடங்கியுள்ளன. நெல் மகசூல் பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து கோதைமங்கலம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: உழவு, நாற்று நடவு, உரம், களை எடுத்தல், தண்ணீர் என ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவு செய்துள்ளோம். கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பெய்த திடீர் மழையால் கதிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேறும், சகதியுமாக வயல் இருப்பதால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

மழை நின்ற பிறகு நெல் மணிகளை வெயிலில் உலர்த்திய பிறகே விற்பனை செய்ய முடியும். நீரில் மூழ்கியதால் சில நெல் மணிகள் முளைக்க தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராமசாமி கூறியதாவது: கோதைமங்கலம், மானூர், தும்பலப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் நீரில் நனைந்த நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியுள்ளன.

இதனால் விவசாயிகள் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு மட்டுமின்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் அவர்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பையும் ஈடு செய்யும் வகையில் நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE