போதை பொருள்கள் நடமாட்டம் உள்ளதா? - பெரும்பாக்கம் குடியிருப்பில் போலீஸார் சோதனை

By KU BUREAU

சென்னை: பெரும்பாக்கம் குடியிருப்பில், போதைப் பொருள்கள் நடமாட்டம் குறித்து, துணை ஆணையர் தலைமையில் 200 போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. போலீஸார் நடவடிக்கை எடுத்தாலும், போதைப்பொருள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே உள்ளது. மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், உதவி ஆணையர், 3 ஆய்வாளர்கள், 17 உதவி ஆய்வாளர்கள், பெண், ஆண் போலீஸார் என சுமார் 200 பேர், அங்குள்ள 8 அடுக்கு குடியிருப்பு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது: பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய குடியிருப்பில் வசிக்கும் இளைஞர்கள் அதிக அளவில் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மேலும் வீட்டுக்குள்போதைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை 6 முதல் 8 மணிவரை எழில் நகர் குடியிருப்பில் சரித்திர குற்ற பதிவேடு குற்றவாளிகளில் 13 பேர் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், சுந்தர் என்ற சுந்தர்ராஜ், திலீப் குமார் ஆகியோர் வீட்டில் இருந்து 2 அடி நீளமுள்ள கத்தியும், சல்மான் ஷேக் என்பவர் வீட்டில் இருந்து 100 கிராம் அளவில் 10கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல்செய்யப்பட்டன. இந்த சோதனையில் யாரும் கைது செய்யப்படவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் வேட்டை தொடரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE