மருத்துவ கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

By KU BUREAU

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்த அருணகிரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2017-ல் தாக்கல் செய்த மனுவில், "என் மகள் 2017-18 கல்வி ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இருப்பினும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முறைப்படி நடைபெறவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட என் மகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரரின் மகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். 12-ம் வகுப்புத் தேர்வில் 1,124 மதிப்பெண்களை பெற்ற அவர், நீட் தேர்வில் 136 மதிப்பெண் பெற்று கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ளார். 46 இடங்களுக்கான பட்டியலில் 43-வது நபராக கலந்துகொண்டு இருந்திருக்கிறார். அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3 இடங்கள் இருந்த நிலையில், மருத்துவக் கல்வி இயக்குநர் அவற்றை ஓசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கியுள்ளார்.

மனுதாரரின் மகளுக்கு அரசுக் கல்லூரிஎனக் குறிப்பிட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அவரிடம் கற்பித்தல் தொகையாக ரூ.9,600 பெறப்பட்டுள்ளது. அவர் கல்லூரியில் சேர்ந்த பின்னர் அது சுயநிதிக் கல்லூரி எனக் குறிப்பிட்டு ரூ.3.70 லட்சமும், கல்விக் கட்டணமாக ரூ.75 ஆயிரமும் கட்ட வேண்டும் எனமருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் கட்டணம் முழுவதையும் செலுத்தியுள்ளார்.

பின்னர் தொடர்ச்சியாக கட்டணம் செலுத்த இயலாது என்பதால், அரசுபல் மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம்ஒதுக்குமாறு மனுதாரர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளார். நல்ல மதிப்பெண்களுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு அரசுக் கல்லூரியில் இடம் வழங்கவில்லை.

கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரியை அரசுக் கல்லூரிகளின் கீழ்வகைப்படுத்தியது சட்டவிரோதமானது. மாணவரையும், அவரது பெற்றோரையும் தவறான முறையில் வழிநடத்திய இந்தசெயல் சட்டவிரோதமானது.

மருத்துவ கனவு சிதைக்கப்பட்டது: மனுதாரரிடம் முன்பே சுயநிதிக் கல்லூரி எனக் குறிப்பிட்டிருந்தால், அவர் வேறு ஒரு கல்லூரியையாவது தேர்வு செய்திருப்பார். அந்த உரிமை அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால், மனுதாரர் மகளது எதிர்காலம், அவரது மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு 2017-ல் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், மருத்துவக் கல்விஇயக்குநர் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் மற்றும்மனுதாரரின் மகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதற்காக மருத்துவக் கல்விஇயக்குநருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் ரூ.5 லட்சத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE