கோடை மழைக்கே உருக்குலைந்த குமரி சாலைகள்!

By எல்.மோகன்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழைக்கே சாலைகள் உருக்குலைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. எனவே மீண்டும் பல கோடி ரூபாய் செலவில் சாலைகளை சீரமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மழையால் மாவட்டம் முழுவதும் சமீபத்தில் போடப்பட்ட சாலைகளும் உருக்குலைந்து தார்கள் பெயர்ந்து பழுதாகி வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நீதிமன்ற சாலை, பாலமோர் ரோடு, வடசேரி, ஒழுகினசேரி, வெட்டுர்ணிமடம், செட்டிக்குளம், கோட்டாறு, கேபி ரோடு, பார்வதி புரம் உட்பட பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து விபத்து ஏற்படும் பகுதிகளாக மாறியுள்ளன.

இவற்றில் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள், மற்றும் அதன் மேல் மூடிகள் கழன்று காணப்பட்ட இடம், மற்றும் புத்தன் அணை கூட்டு குடிநீர் திட்ட பைப் லைன்கள் உடைந்து மழையோடு தண்ணீர் வெளியேறி பகுதிகளில் உள்ள சாலைகளே பலத்த சேதமாகியுள்ளன. இதனால் நாகர்கோவில் சாலைகள் வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத அளவில் விபத்துப் பகுதியாக மாறியுள்ளது.

இதைப் போன்றே கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கருங்கல், திங்கள் நகர், ஆரல்வாய் மொழி, குலசேகரம், களியக்காவிளை உள்ளிட்ட பல பகுதிகளும் உள்ளன.

மாவட்டத்தில் நகர, கிராமம் என பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு தகுதி அற்றதாக மாறியுள்ளன. கோடை மழையால் குமரி மாவட்டம் குளிர்ச்சியடைந்துள்ள அதே சமயம் மாவட்டம் முழுவதும் சாலைகள் சேதமடைந்துள்ளதால் மீண்டும் பலகோடி செலவழித்து சாலைகளை சீரமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி சேதமடையும் பகுதிகளில் திட்டமிட்டு வலுவான சாலைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE