சென்னை: அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் கடந்த ஆக.22-ம் தேதி முதல் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பேச்சு, கவிதை, மணல் சிற்பம், ஓவியம் வரைதல், நாடகம் உட்பட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் போட்டிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளி அளவிலான போட்டிகளை நடத்துவதற்கான கால வரம்பு நீட்டிப்பு குறித்து மாவட்டங்களில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இதையடுத்து பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கு செப்டம்பர் 27-ம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். இந்த விவரத்தை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது