டெல்லியின் புதிய முதல்வர் ஆதிஷி முதல் பெரியார் திடலில் விஜய் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள்

By KU BUREAU

டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஆதிஷி! -துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் ஆதிஷி உரிமை கோரினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிஷி, “அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முடிவு உலக ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு போதுமானது அல்ல; டெல்லி மக்களின் தீர்ப்பை அறிய அவர் விரும்புகிறார். தான் நேர்மையானவர் என்று பொதுமக்கள் கூறினால்தான் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்று அவர் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தது வருத்தம் அளிக்கிறது. அவரை மீண்டும் முதல்வராகக் கொண்டுவர பாடுபடுவேன்” என்றார்.

காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக ஆதிஷி பதவி ஏற்கிறார். தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டின் ஒரே முதல்வராக உள்ள நிலையில், ஆதிஷியின் பதவி ஏற்புக்குப் பின் இந்த எண்ணிக்கை இரண்டாக கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளது கவனிக்கத்தக்கது.

திமுக பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்: சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, ““இன்றைக்கு கிரீம் பன்னுக்கு ஏன் இவ்வளவு வரி போடுகிறீர்கள் என்று கேட்கக் கூட உரிமையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான ஓர் அறிவிப்புதான், இந்த பவள விழா செய்தியாக நான் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரே இயக்கம் திமுக மட்டும்தான்” என்று கூறினார்.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்: “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு சிக்கல் இருந்தது; தற்போது விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை காங்கிரஸ் கட்சி பிரச்சினையாக்குகிறது” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா தகவல்: நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சுங்கச்சாவடி உடைப்பு: மமகவினர் மீது வழக்குப் பதிவு: திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மணப்பாறை மமக எம்எல்ஏ அப்துல் சமது உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடி உடைக்கப்பட்ட விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட மமக தலைவரும், பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹருல்லா உள்ளிட்ட 300 பேர் மீது, 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியனான இந்தியா: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் 1-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இது இந்தியாவின் 5-ஆவது கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி இடமாற்றம்: அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எலான் மஸ்க் பதிவுக்கு வெள்ளை மாளிகை கண்டனம்: முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை குறிவைத்து இரண்டு கொலை முயற்சிகள் அரங்கேறி உள்ளது. இந்தச் சூழலில் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கொலை முயற்சியை எதிர்கொள்ளாதது ஏன் என்று டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவரது இந்தப் பதிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அதனை தான் வேடிக்கையாக சொன்னதாக தெரிவித்தார். இந்நிலையில், இந்த பதிவு முற்றிலும் பொறுப்பற்றது என வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

பெரியார் திடலில் மரியாதை செலுத்திய விஜய்! -பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பெரியார் நினைவிடத்தில் மலர்த் தூவி அவர் வணங்கியது தமிழக அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பாராட்டுக் குறிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் விஜய்யை பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்த நாளான சமூக நீதி நாளில், அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த் தூவி வணக்கம் செலுத்தியிருப்பது, அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும், அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது” என பதிவிட்டுள்ளார்.

விஜய் மீது தமிழிசை விமர்சனம்: “திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சாயலை சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தான் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு சாயம் பூசிக் கொள்கிறாரா என்பது தெரியும். இரு கட்சிகளும் அவரை விட்டுவிடுவார்களா? திரைப்படத்தையே வெளியிட அனுமதிப்பதில்லை. மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கின்றனர். அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்து பட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவு தான்” என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE