பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க 4 பிரிவுகளாக வந்த தவெகவினர் @ திண்டுக்கல்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தமிழக வெற்றிக் கழகத்தினர், பிற கட்சிகளை விட அதிகம் பேர் கூடி தங்கள் பலத்தை காட்டினர். ஆனால் நான்கு பிரிவுகளாக வந்ததால் பலவீனம் காணப்பட்டது.

திண்டுக்கல்லில் பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புக்கள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி காலை முதலே தொடர்ந்து நடைபெற்றது. திராவிடர் கழகம், அதிமுக, மா.கம்யூ., உள்ளிட்ட கட்சியினர் ஒரே குழுவாக வந்து மாலை அணிவித்து சென்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதலில் மகளிரணியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கவந்தனர். இவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை.

த.வெ.க., கட்சியினர் ஒரே சேர்ந்து தான் செல்லவேண்டும் என வலியுறுத்தினர். இதனால் மாலை அணிவிக்க சென்ற த.வெ.க., மகளிரணியினர் தயங்கி நின்றனர். இதையடுத்து ஏ.எம்.சி., சாலையில் வந்த இளைஞரணியினரும் தனியாக மாலை அணிவிக்க காத்திருந்தனர். இதன் பின் இரண்டு அணிகளாக மாநகராட்சி சாலை பகுதியில் இருந்து ஒரு அணியினரும், சாலைரோடு பகுதியில் இருந்த ஒரு அணியினருமாக த.வெ.க., கட்சியினர் வந்தனர்.

திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த த.வெ.க., கட்சியின் ஒரு அணியினர்.

அப்போதும், அனைவரும் ஒன்றிணைந்து மாலை அணிவிக்காமல் தனித் தனியாக காத்திருந்தனர். முதலில் மகளிரணியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு சென்றனர். அதன் பின் ஒரு அணியினர், மற்றொரு அணியினர், அடுத்ததாக இளைஞரணியினர் என நான்கு பிரிவுகளாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதை கண்ட பிற அரசியல் கட்சியினர், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் மற்றும் போலீஸார், கட்சி முழுமையாக அரசியல் களம் இறங்காத நிலையிலேயே நான்கு கோஷ்டிகளா என கேள்வி எழுப்பினர். அனைவரும் ஒன்றிணைந்து வந்திருந்தால், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுக கட்சியினரின் எண்ணிக்கையை விட த.வெ.க. கட்சியினர் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE